போதைப் பொருள் பாவணையும் அதனால், ஏற்படும் சமூக சீர் கேடுகளும்

உலகமானது புயல் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் மிகவும் முக்கியமாக பேசப்படும் பேசு பொருளாக போதைப் பொருள் பாவணை இருந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சமுதாயம் பொழுது போக்கிற்காகவும் , சிறிது நேரம் கிடைக்கும் அற்ப சந்தோஷத்திற்காகவும் பயன்படுத்தப்படும் இந்த போதைப் பொருட்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவித்து உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதோடு சமூகத்தில் பல ஒழுக்க சீர் கேடுகளையும் தோற்று விக்கின்றது.

அந்த வகையில் இன்றைய சமூகத்தில் எல்லா விதமான குற்றச் செயல்களுக்கும் அடிப்படை மூலக் காரணியாக இருப்பது இந்த போதைப் பொருள் பாவணை தான். இவ்வாறான போதைப் பொருட்களிற்கு உதாரணமாக மதுபான வகைகள், புகையிலை, கஞ்சா , அபின் , பான் மசாலா, போதை தரும் இன்ஹேலர்கள் என பல வகைகளை குறிப்பிடலாம். இப்போதை வஸ்துக்கள் ஒருவரை முழுமையாக அதற்கு அடிமையாக்கி விடும் தன்மை கொண்டது . போதைப் பொருள் பாவணையாளர்கள் தனது வருமானம் முழுவதையும் இதற்கென செலவிட்டு அவர்களது உடலையும் கெடுத்துக் கொள்வார்கள். இச்செயற்பாடு “ யானையே தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக் கொள்ளும் “ ஓர் பயனற்ற செயலாக காணப்படுகிறது.

மேலும் மதுப்பாவணையால் உடல் பருமன், ஈரல் , குடல் , சிறு நீரகம் , இதயம் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டு விரைவில் நோயாளியாகி இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இதனால் தான் மது “ நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு “ மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு “ என பல விளம்பரங்களை பல இடங்களில் காண முடியும். நாட்டில் பல இடங்களில் இன்றைக்கு மதுப்பாவணை சாலைகள் பெருகி விட்டன. இதனால் இது பெரும் வியாபாரமாக மாறிக் கொண்டு வருகிறது . இதனால் பல குடும்பங்கள் வறுமையிலும் பல குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றவும் நாட்டில் களவு , கொலை, விபத்துக்கள் , பெண்கள் மீதான வன்முறைககள் இடம் பெறவும் மதுப்பாவணை ஒரு பிரதான காரணமாக அமைகின்றது.

அது மட்டுமின்றி இன்று பல இளைஞர்கள், கல்வி கற்க வேண்டிய சிறுவர்கள் கூட தமது கல்வியை இடை நிறுத்தி விட்டு மதுப் பாவணைக்கு அடிமையாகி திரிவதை நாம் அவதானிக்க முடிகின்றது . இவ்வாறு இளம் வயதிலே இதற்கு அடிமையாகி பல குற்ற செயல்களில் ஈடுபடுவதனால் இவர்களின் எதிர் காலமே கேள்விக் குறியாகி விடுகின்றது . நாட்டினுடைய வருங்காலத்தை தீர்மானிக்க வேண்டிய இளம் சமுதாயத்தினர் கல்வி கற்று நற் பிரஜைகளாக வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களுடைய கனவாகும் . அதற்காக அவர்கள் மிகுந்த சிரமப்பட்டு பல தியாகங்களை செய்து தமது பிள்ளைகளை வளர்த்து கல்வி கற்க அனுப்புவார்கள். ஆனால் இன்றைய காலத்து இளைஞர்கள் சிறுவயதிலே சில சமூக விரோதிகளான மதுப்பாவணையில் ஈடுபடும் நண்பர்களோடு சேர்ந்து போதைப் பழக்கத்திற்கு சிறிது சிறிதாக ஆரம்பித்து போதையின்றி வாழ முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர் . போதைக்கு அடிமையானவர்கள் இயல்பாகவே சமூகத்தால் வெறுக்கப்பட்டு இயல்பாகவே சந்தோஷங்களையும் இயற்கையான அழகையும் இழந்து அருவருக்கத்தக்க மனிதர்களாக மாறி விடுகின்றனர்.

இவ்வாறான போதைப் பழக்கத்திற்கு அடிமையாக பிரதான காரணமாக அமைவது வீட்டுச்சூழலும் தகாத நண்பர்களுடனான தொடர்புகளுமே எனலாம். ஏனெனில் வீட்டில் வசிக்கும் யாராயினும் ஒரு நபர் மதுபானம் , புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவோராக இருந்தால் அவ்வீட்டில் வசிக்கும் சிறுவர்களும் அதனைப் பயன்படுத்த தூண்டப்படுவர் . பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வீட்டிற்கு வெளியே எவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள் , யாருடன் நட்புக் கொள்கின்றார்கள் என கண்காணிக்க தவறி விடுகிறார்கள் . இதனால் போதைப் பொருட்களை விற்பனை செய்வோர் இளம்பராயத்தினரை இலக்கு வைத்து தமது வியாபாரத்தை மேற்கொள்கிறனர்.

அதுமட்டுமன்றி இன்றைய சமுதாயம் தனது தகுதி , வயது இவற்றுக்கெல்லாம் மீறி நட்புறவை பேணி வருகின்றனர். அதாவது 10 வயது சிறுவன் 20 வயது இளைஞனோடு தொடர்புகளை வைத்துக் கொள்கின்றான். இவ்வாறு பழகும் சமயம் 20 வயது இளைஞன் சில வேளை போதைக்கு அடிமையானவனாக இருக்கக்கூடும். எனவே அவனோடு தொடர்புகளை வைத்துக் கொள்ளும் போது அச்சிறுவனும் அப்பழக்கத்திற்கு தானாகவே சென்று விடும் ஓர் துர்ப்பாக்கிய நிலை உருவாகின்றது . இந்நிலை முற்றாக ஒழிய வேண்டும். சம வயதினரையும் தாண்டி பெரியவர்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளும் போது பல வித குற்றச்செயல்களும் , பாலியல் துஷ்பிரயோகங்களும் சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

போதை என்பது தன் நிலை மறக்க செய்யும் ஓர் கொடூர விஷம். இன்றைய இளம் பிஞ்சுகள் திருமணமாகிய தாய் எனும் அந்தஸ்தில் உள்ளவர்களோடு தகாத உறவுகளை வைத்துக் கொண்டு தமது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றனர். இது போன்ற பல சம்பவங்கள் அண்மையில் நடந்ததை நம்மால் அவதானிக்க முடிகின்றது . இக் கசப்பான சம்பவங்களை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது. கல்வி கற்க வேண்டிய வயதில் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு தம் எதிர் காலத்தையே பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர். உயிர்களின் மதிப்பறியாத பேதைகளாக வாழும் சமூகமாக இன்றைய சமூகம் மாறி விட்டது.

அதுமட்டுமா ? அண்மையில் நடந்த ஆயிஷா எனும் சிறுமியின் கொலையும் கவலைக்குரியது . இரை தேடிச்சென்ற இளம் பிஞ்சு ஒரு அரக்கனிடம் சிக்கி உயிரிழந்தது நம் அனைவரையும் கவலையில் ஆழ்த்திய சம்பவமே. இச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற அக்கொடூரன் போதைக்கு அடிமையான ஒரு மனித மிருகமே . இது போன்ற சிறுமிகளை இன்று கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இது போன்ற பல கசப்பான சம்பவங்களுக்கு முழு முதற் காரணம் இப்போதை பாவணையில் ஈடுபட்ட நம் சமுதாயமே .

மேலும் உலகத்தையே உள்ளங்கைக்குள் அடக்கிய கைத்தொலை பேசிப்பாவணையாலும் பல இளைஞர்கள் போதைக்கு அடிமையாக காரணமாக அமைகின்றனர். ஏனெனில் இணையத்தளத்தில் தேவையற்ற விடயங்களை பார்வையிடுவதும், சினிமா என்பவற்றை பார்வையிட்டு அதில் வரும் குடி போதைக் காட்சிகளை நாகரீகமாக கருதி போதைக்கு அடிமையாவதும் இன்று பரவலாகி விட்டது. எனவே நாளுக்கு நாள் மனிதரின் உயிரையும், மானத்தையும் பறிக்கும் இப்போதையை தடை செய்வது மட்டுமன்றி அதிலிருந்து தவிர்ந்து நடக்கவேண்டியதும் கட்டாய கடமையாகின்றது . சாதாரணமாக வருடம் ஒன்றிற்கு உலகளவில் 11.8 பில்லியன் மக்கள் போதைப் பாவணை காரணமாக நோய்களால் இறந்து போகின்றனர். 350000 இறப்புக்கள் மதுப்பாவணையால் நிகழ்கின்றன. இவ்வாறான பல உயிரிழப்புகளுக்கும் , நோய் நிலமைகளுக்கும், பல பேருடைய குடும்ப சீரழிவுகளுக்கும் காரணமான இப்போதை பொருட்களை தடை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும் .

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்ற ரீதியில் அவர்களின் எதிர் காலத்தை பேணி பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு பெற்றோர்கள் மீதும் கடமையாகின்றது . பெற்றோர்கள் தம் பிள்ளை போதைக்கு அடிமையாகி விட்டார்கள் என்பதை அறிந்து கொண்டால் அவர்களை குற்றம் சொல்வதோ, தண்டிப்பதோ கூடாது . அவர்களை அரவணைத்து போதை பழக்கத்தால் ஏற்படும் பின் விளைவுகளை எடுத்துக் கூறி அவர்களை அப்பழக்கத்திலிருந்து சிறிது சிறிதாக வெளிக் கொணர வேண்டும். போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் செயற்பாடுகளை ஒழிக்க அதிக நாடுகள் முயற்சித்தும் இவை இரண்டும் குறைந்தபாடில்லை.இவைகளின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கின்றது. போதைப்பொருள் கடத்தல் தரை,கடல்,வான் மார்க்கமாக நடைபெறுகின்றது. இதனால் அதிக பணத்தை இதில் ஈடுபடுபவர்களும் பெற்று வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தலில் இலங்கை கேந்திர ஸ்தானமாக விளங்கியதாக முன்னர் குற்றச்சாட்டொன்று நிலவியது. அதிக அளவிலான போதைப்பொருட்கள் பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும் திறந்த பொருளாதாரக் கொள்கை, உல்லாசப் பயணிகளின் வருகை போன்ற காரணிகளால் போதைப்பொருள்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதாகவும் ஆபத்தான போதைப் பொருட்களை கடத்தும் அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அது மட்டுமல்லாது மேலை நாட்டு கலாச்சாரம் என உயர்வாக கருதுவதும் இப்பழக்கத்திற்கு ஒரு காரணமாகும். பிரச்சினைகள் மற்றும் குறைகளை மறந்து நிம்மதியாக வாழலாம் என்ற தவறான எண்ணங்கள் நமது இளம் சந்ததியிடம் அதிகமாகவே உள்ளது. எனவே அவற்றை மறக்க இத்தீய போதையில் அடிமையாகி விடுகின்றனர். போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது நரம்பு மண்டலமாகும். மூளைக்குச் செல்லும் நரம்புகளை பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கிறது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதனை உட் கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கையை இழக்கின்றனர் , தனிமையை நாடுகிறார்கள். எனவே இன்றைய சமுதாயம் கல்வியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இதற்கான முழு முதற் காரணம் போதையில் அடிமையானதே .

எனவே இத்தகைய தீய பழக்கங்களுக்கு நம் சமுதாயம் செல்வதை தடுக்க முயற்சி எடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் கட்டாய கடமையாகின்றது. போதையை முழுமையாக அழிக்க முடியாது எனினும் சிறிது சிறிதாக அழித்து நம் சமுதாயத்தினரையும் நம் நாட்டையும் கட்டியெழுப்புவோமாக.

Similar Posts:

    None Found
Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *