நவயுகத்தில் கற்போனும் கல்வி உளவியலும்

21ம் நூற்றாண்டிலே தொழிநுட்பத்தின் உச்சத்தில் ஒடிக் கொண்டிருக்கும் நாம், எம்முடைய நாற்பொழுதுகளை காலைச் சூரியன் கண்விழித்தது முதல் இரவு சந்திரன் விழித்தெழும் வரையிலும், இல்லை. காலை, மாலை என்ற வேறுபாடின்றி மணிக்கூட்டின் முட்களுக்கு ஒய்வில்லையேன், ஏன் எமக்கு மாத்திரம் ஒய்வு வேண்டுமோ? என, தொழிநுட்பத்தின் பிடியில் சிக்குண்டு நகர்த்திக் கொண்டிருக்கிறோம். இந்நவ யுகத்திலே எம்மவர்களின் செயல்கள் அனைத்தும், ஊண் தொடக்கம் உரக்கம் வரையிலே நவீனம் பெற்றுள்ளமை நாம் அறிந்த ஒன்றேயாகும்.

இதனிடத்தில் கல்வி ஒன்றும் இதிலே விதிவிலக்கல்லயே!. மேலும் திண்ணமாக நோக்குகையில் நவீனம் கல்வியில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும், அல்ல, கல்வி  நவீனத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் இரு பார்வை கொள்ளலாம். இவ்விரண்டிலேயே, ஒன்று இல்லையெனில் மற்றொன்றும் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை எனவும் ஐயமின்றிக் கூறலாம்.

 இந்நவீன கல்வியினை நோக்கின், கல்வியானது (Education) கற்போனின் (Learner) உள்ளுணர்வில் காணப்படுகின்ற பல்வேறுபட்ட ஆற்றல்களையும் திறன்களையும் வெளிக்கொண்டுவர உதவுகின்ற செயன்முறையாகும். கல்வியினுடாக வெளிக் கொண்டுவரப்படுகின்ற கற்போனினது ஆற்றல்கள் மற்றும் திறன்கள் அவனுடைய அறிவு, உடல், ஓழுக்கம் போன்றவற்றுடன் தொடர்புடையவையாகும். அது மாத்திரமன்றி கல்வி என்பதற்கு “உயர்த்துதல்” என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது கற்போனது நிலையை உயர்த்தவல்ல விடயமாகும்.

இவ்வாறான கல்வியின் முதிர்ச்சியின் ஒரு விளைவே உளவியல் எனவும் குறிப்பிடலாம். உளவியல் (Psychology) என்பது “மனதைப் பற்றிக் கற்றல்” அல்லது “ஞானம் பற்றிய கற்கை” என இணங்காணப்பட்டது. இன்று “மனித நடத்தை பற்றிக் கற்கும் ஒரு விஞ்ஞானம்” எனப்பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் “Psychology is the science of mind and behavior – உள்ளம் மற்றும் நடத்தைகளைப் பற்றிய ஒரு (விஞ்ஞானம்) கற்கை” உளவியல் எனப்படும். இதிலே மனித செயற்பாடுகள் அனைத்தையும் நடத்தை எனக்குறிப்பிடலாம்.

இன்றைய உளவியலானது விஞ்ஞான முறையின் மூலமாக தனிநபர், குழு உறுப்பினர்களது தரவுகளை சேகரித்து நடத்தைகளை பகுப்பாய்வு செய்து எதிர்வு கூறுவதாகவே காணப்படுகிறது. எனவே மனிதனின் அனைத்து நடத்தைளும் உளவியலின் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்படுகிறது. இவ்வுளவியலானது பல பிரிவுகளை உள்ளடக்கியது. அதனிலே பிரயோக உளவியலின் ஓர் கிளையாகவே கல்வி உளவியல் காணப்படுகிறது. மேலும் கல்வி உளவியல் நவீன உளவியலின் ஒரு பகுதி எனவும் குறிப்பிடலாம்.

கல்வி உளவியல் (Educational psychology) பற்றிய பரவலாகப் பயன்படுத்தப்படும் அறிஞர்கள் கருத்துக்கள் சில,

•             Rifford (1984), Grinder (1981) – “ உளவியலில் இடம்பெற்றுள்ள நுட்பமுறைகளை வகுப்பறைச் செயல்களையும் சமூக வாழ்க்கையும் கற்பதற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு முயற்சி எடுத்தல்”.

•             woolfolk – “ கல்வி உளவியல் பிரதானமாக கற்றல், கற்பித்தல் செயல்முறைகளை விளங்கிக் கொள்வதற்கும் அச் செயல்களை விருத்தி செய்வதற்குமான நுட்பமுறைகளை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு வழிகாட்டுகிறது”.

•             Lindgren (1980) – “ கல்வி உளவியல், கற்பவர் (Learner), கற்றல் செயல்முறை (Learning  Process), கற்றல் சந்தர்ப்பங்கள் (Learning  situations) ஆகிய 3 அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது”.

இன்று கல்வி உளவியலானது தனித்துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. உளவியலின் இக்கிளை குழந்தைப் பருவம் மற்றும் இளமைப்பருவத்தின் கற்றல் செயன்முறையை மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபடும் சமூக உணர்ச்சி மற்றும் அறிவாற்றல் செயன்முறைகளை உள்ளடக்கியதாகும்.

இதன் மூலம் கல்வி உளவியலானது கற்றல் (Learning), கற்பித்தல் (Teaching) செயன்முறையில் செல்வாக்குச் செலுத்துகிறது என்பது தெளிவாகிறது. கற்பிப்போனின் (Teacher) கற்பித்தல் செயற்பாட்டின் மூலமாகவே கற்போன் கல்வியைப் பெற்றுக்கொள்கிறான். கல்வி, கற்றல், கற்பித்தல் ஆகிய செயற்பாடுகளானது ஆரம்ப காலங்களில் வெறுமனே கல்வி என்ற அடிப்படையில் மாத்திரமே நோக்கப்பட்டது. பிற்காலத்தில் அதாவது நவீன வளர்ச்சியில் உளவியல் உருவம் பெற்ற பின்னரே கல்வி உளவியல் என்ற அடிப்படையில் கல்வி பிரச்சினைகள் யாவும் ஆராயப்படுகின்றன. எனவே உளவியல் தொடர்பான அறிவினை கல்வியில் பிரயோகிப்பதாகவே கல்வி உளவியல் காணப்படுகிறது எனச் சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

அதாவது கற்றல், கற்பித்தல் செயற்பாட்டினை உளவியல் நிலையில் ஆராய்ந்து கற்போனுடைய கற்றலை மேம்படுத்த உதவும் வழிமுறைகளை கண்டறியும் உளவியல் பிரிவாகும். மேலும் கற்போனது கற்றலை விஞ்ஞான ரீதியாக விளக்க முற்படும் ஒர் அறிவுப்புலம் எனவும் கூறலாம். இவற்றைக்கொண்டு நோக்கின் கல்வி உளவியலில் புதிய தகவலை கற்போன் எவ்வாறு கற்கின்றான், கற்போனின் அறிவாற்றல், அறிவாற்றல் வளரச்சி, உணர்ச்சி, நடத்தை மற்றும் கற்போனின் உளவியல் வளரச்சி போன்றவற்றை அறிவதும் ஒரு பகுதியாகும்.

எவ்வயதினிலும் எப்போதினிலும் குறுகியகாலக் கற்கையோ அல்லது நீண்டகாலக் கற்கையோ காலவரையறை எவ்வாறிருப்பினும் கற்போன் தனது கற்றலை எவ்வாறு ஆரம்பிக்கிறான், எவ்வாறு கற்றலில் வளர்ச்சி அடைந்து கொள்கிறான், அவனின் வளர்ச்சிப் படிநிலைகள் என்ன?, அவை ஒவ்வொன்றிலும் காணப்படும் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், வளரச்சிசார் செயல்கள், அவற்றில் எழும் பிரச்சினைகள், அதனைத் தீர்ப்பதற்கான நுட்பங்கள், ஆற்றல்கள் மற்றும் அவற்றை வெளிப்படுத்திடும் கற்போனது வெளிப்படையான நடத்தைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளாமல் தற்காலத்தில் கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என நவயுக தோற்றமான கல்வி உளவியல் எடுத்துரைக்கிறது.

எவ்வாறெனில் கற்போனைப் பற்றிய பூரணத்தகவலறிந்த பின்னர் கற்போனின் தன்மையறிந்து, அவனுக்கு எவ்வாறான கற்றலை மேற்கொள்ள வேண்டும், கற்றல், கற்பித்தலில் ஈடுபடும் போது எவ்வாறான நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் கற்றல், கற்பித்தலின் போது உருவாகும் பிரச்சினைகளை எவ்வாறு முறியடித்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், கற்றல் தொடர்பான கொள்கைகள், கோட்பாடுகள் என்பவற்றை அறிந்து கற்பித்தலை செயற்படுத்துவதனூடாக கற்போனிடமிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற முடியும். இதுவே தற்கால கல்வி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடலாம்.

இவ்வாறான கற்றல், கற்பித்தலின் பின்னர் கற்போனின் வளர்ச்சியை மதிப்பிடுவதே கல்விச் செற்பாட்டின் அடுத்தகட்டப் படிமுறை, இதிலும் கல்வி உளவியல் செல்வாக்குச் செலுத்துகிறது. அதாவது கற்போனை மதிப்பிடும் முறைகள், ஏலவே குறிப்பிட்டவை போல கற்போனின் கல்விச் செயற்பாட்டிற்கு ஏற்ப கற்போனின் தன்மையறிந்து மதிப்பிடும் முறைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறே கற்றல் மதிப்பீட்டின் போது ஒவ்வொரு கற்போனையும் தனித்தனியாக ஆய்வு செய்து அவன் சார்ந்த பிரச்சினைகளை இணங்கண்டு அவைகளுக்கான தீர்வைக் கண்டறிய வேண்டும். அத்தோடு கற்றல், கற்பித்தலின போது கற்றல் குறைபாடுகளைக் கண்டறிந்து சரி செய்வதோடு வேவ்வேறு கற்பித்தல் முறைகளின் திறன்களையும் பயன்களையும் கற்போனின் தன்மையறிந்து அவனிற்கு ஏற்றாற் போல கணித்தல் வேண்டும்.

இவ்வாறாக நவயுகத்தில் கற்போனின் கல்விச் செயற்பாட்டில் கல்வி உளவியல் பாரிய தாக்கம் செலுத்துகிறது. அதாவது கல்விச் செயற்பாட்டின் முதன்மைக் காரணியான கற்போனை அடிப்படையாகக் கொண்டே கல்வி உளவியலானது நடைமுறைப்படுத்தப்படுகிறுது. மழலையர் பள்ளி (Kindergarten) தொடக்கம் அனைத்து கல்விச் செயற்பாடுகளிலும் கற்போனே மையப் பொருளாகிறான். இதுவே நவயுகத்தில் கற்போனிடமிருந்து சிறந்த பெறுபேறுகளைப் பெற வழிவகுக்கிறது எனவும் நவயுக வளரச்சிக்கு கற்போனும் கல்வி உளவியலுமே அடிப்படைக் காரணம் எனவும் ஐயமின்றிக் கூறலாம்.

Similar Posts:

Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *