இன்றைய குடும்பங்களில் மூ‌த்த பிள்ளைகளின் அவல நிலையும், அவர்களுக்குரிய அந்தஸ்தின் நிலையும்

அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, “குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது ஆகும்.” உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவது குடும்பத்தின் முக்கியமான தொழிற்பாடுகளில் ஒன்றாக நோக்கப்படுகிறது”. இந்தக் குடும்பத்தின் கட்டமைப்பானது பகிர்தல், கவனித்தல், பராமரித்தல், பேணி வளர்த்தல் போன்றவற்றை வழங்கல் அல்லது பெற்றுக்கொள்ளல், ஒழுக்கநல உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல், அறவழியிலான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்களைக் கொண்டிருத்தல் ஆகியவற்றால் பேணப்படுகிறது.

பிள்ளைகளின் பார்வையில், குடும்பமானது, குடும்ப அமைப்புக்கான ஓர் அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. அதேவேளை பெற்றோரைப் பொறுத்த வரையில், குடும்பமானது, பிள்ளைகளை உருவாக்கி, சமூகத்துடன் அவர்களைப் பிணைக்கும் இடமாக இருக்கிறது. அவ்வாறான குடும்ப அத்தியாயத்தை தொடங்குவதன் அடித்தளத்தமாக அமைவது முதல் குழந்தையின் வரவே ஆகும்.

திருமண பந்தத்தில் பிணையும் மனங்களில் முதன் முதலாகத் தோன்றும்  தாய், தந்தை என்ற மகத்துவக் கனவை குறைவின்றி அளித்து; சமுதாய அந்தஸ்தில் கலக்கமின்றி மிளிரச் செய்ய பூமியில் உதிக்கும் பொற் செல்வமாக ஒவ்வொரு தம்பதியினரதும் முதல் குழந்தை கருதப்படுகிறது. அந்தக் குழந்தையின் பிறப்பு எவ்வாறு கொண்டாடப்பட்டு விழாக்கோலம் பூணுகிறதோ அதே அளவுக்கு அவர்களது வளர்ப்பும், கவனிப்பும் பாரபட்சமின்றி பரிமாறப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதில் விவாதிக்க வேண்டிய உட்பொருள் இருப்பதாகத் தோன்றவில்லை.

தங்கள் மனங்களை கள்ளமின்றி குளிர்வித்த சின்னஞ்சிறிய பிஞ்சு சஞ்சலமின்றி வாழ்க்கையை திருப்தியுடன் கழிப்பதற்கான தூண்கள் பெற்றோர்களால் திட்டமிடப்பட்டு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்தி வலியுறுத்திச் சொல்ல மறக்கக்கூடிய கவனமற்ற சாதாரண ஒன்றும் இதுவல்லவே. ஆணினதும், பெண்ணினதும் தனிப்பட்ட வாழ்க்கை குழந்தைகளோடு இரண்டறக் கலந்து குடும்பமாக உருவாக்கப்படும் போதே திருப்திகரமான ஒரு முழுமைத்துவத்தை சமூகத்தில் எட்டும். ஒற்றைக் குழந்தையோடு பெரும்பாலான தம்பதிகளின் இல்லற வாழ்வு கடந்துவிடுவதில்லை. அவர்களது செங்கலான வீட்டுக்கு உயிரூட்டவும், ஆயுள் முழுவதும் அவர்களது அக மகிழ்ச்சியை போற்றிப் பேணவும் பிள்ளைச் செல்வங்கள் மாத்திரமே போதுமானதாக திகழ்கின்றனர்.

தனது வீட்டை தனக்கு அடுத்ததாக அலங்கரிக்கும் மென் பாதங்களை தொட்டு முத்தமிட்டு தோளில் பம்பரமாக போட்டுச் சுற்றி விளையாடும் முதல் குழந்தையின் பரஸ்பர மனதை அள்ளித் தெளிக்க வார்த்தை மந்திரத்தைக் காட்டிலும் பெற்றோரின் உணர்வுபூர்வமான ஒற்றைத் தடவல் கோடி வாசனைப் பூக்களை முதல் குழந்தையின் மனதில் விதைக்கும். இயற்கையாகவே அக் குழந்தையின் சிந்தையில் தன் இரத்த பந்தங்களை காக்கும் காவல் அரண் பிறக்கும்‌.

காலப்போக்கில் அவர்களது நடத்தையிலும், செயல்களிலும் எதிர்மறையான எண்ணங்களும், வேற்றுமைக் குணங்களும் உலாவ பெற்றோரின் அன்பின் மாறுபட்ட வடிவங்களும், அதன் பரிணாமமுமே பிரதான காரண கர்த்தாவாக அமைகிறது. ஏனெனில் இரண்டாவது குழந்தை கிடைத்தவுடன் மூத்த செல்வத்தை வளர்ந்தவனாக நடாத்தும் முதல் புள்ளியே பிற்பட்ட மொத்த வாழ்க்கையின் சிதைவுக்கு ஆரம்பக் கீறலாக அமைகிறது. புதிதாகக் கிடைக்கும் மலர் மாத்திரம் மழலை அல்ல. உங்கள் அன்பை இறுக்கமாக தன்னுடன் பிணைத்திருக்கும் ஆரம்ப தொப்புள் கொடி உறவும் அச்சாணி இல்லாத தேர் போல திக்குத் தெரியாத கன்றே ஆகும். அடிபட்ட வலியில் கலங்கும் ஒரு கண்ணை பரிதவிப்போடு  தடவிக் கொடுக்கும் நீங்கள், மற்ற கண் ஏக்கத்தின் வலியில் கலங்குவதை அவதானிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்ளாமல் விட்டுகிறீர்கள் என்பது கவலைக்குரியதாகும். சராசரியாக பார்க்கின்ற போது பெரும்பாலான வீடுகளில் இது இயல்பான ஒரு விடயமாக அவர்கள் அறியாமலேயே அரங்கேறி விடுகிறது. இந்த நிலை வேரோடு களைய வேண்டியது. ஏனெனில் இன்றைய குழந்தைகளின் உளவியல் ரீதியான பாதிப்புக்களில் முதன்மை அங்கமாக பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறைமை அவதானிக்கப்பட்டு வருகிறது.

சமத்துவம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான ஒரு வாதப் பொருள் மாத்திரம் அல்ல. சமத்துவம் எல்லா இடங்களிலும் காற்றைப் போல வியாபித்து நிறைந்து இருக்கும் துகள்களாகும். இது பிழைக்கின்ற போது அல்லது ஏற்றத்திலும் இறக்கத்திலும் வித்தியாசம் உண்டாகின்ற போது புரட்சிகளே வெடிக்கின்றது. இந்தப் புரட்சியின் ஒலி உங்கள் வீட்டு முதல் பிஞ்சின் மனதில் ஒலிக்கும் அபாயம் ஆபத்தானது என்பதை விட அலங்கோலமானது ஆகும். உள்ளுக்குள் சிந்தும் கண்ணீரையும், வெளியில் குளிர்விக்கும் சிரிப்பையும் பூண்டவர்களாக அவர்கள் வளர்க்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் அவர்களை நடாத்தும் பாங்கே அடுத்த குழந்தைகளின் செயற்பாடுகளின் எதிரொலி ஆகும் என்பதை கவனத்திற் கொண்டும் நடந்து கொள்ளுங்கள். உங்களது மற்ற குழந்தைகளுக்கு அவர்கள் யார் என்பதை அடையாளப்படுத்திக் காட்டப் போவது உங்களில் இருந்தே தொடங்குகிறது.

“உன்னுடைய அண்ணன் அல்லது அக்கா” என்று அறிமுகப்படுத்தும் விதம் அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்குமே ஒழிய அந்தஸ்தை நிலைநிறுத்தி விடாது. மேலும் இவை வெறும் மேலோட்டமான வார்த்தைகளாக மட்டுமே மற்ற குழந்தைகளின் மனதில் பதிந்துவிடும். ஏனெனில் அந்த உறவுக்கான மதிப்பும், மேன்மையும் பெற்றோகளான உங்களால் தராசு முள் போல சமத்துவப்படுத்தும் போது மட்டுமே சாத்தியமான நிகழ்வாகும்.

அவர்களது சகோதர உறவுகளின் பணிகளை கவனிக்கச் சொல்லும் போது அன்பின் கட்டளையாக, அன்பின் மறுவடிவமாக அவர்கள் முன் நீங்கள் திகழுங்கள். அவர்கள் உங்களிடம் இருந்து எதிர்ப்பார்ப்பதும் இதுவே. தன்னுடன் பிறந்தவர்களுக்காக எவற்றையும் இழக்க அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும் அவர்கள் வீணாக பிடிவாதம் பிடிக்க உங்களது  முரண்பாடான ஏவல்களே காரணம் ஆகும். உங்களது உதிரங்கள் தான் அவர்கள் என்றாலும், அவர்களது எண்ணங்கள், எதிர்ப்பார்ப்புக்கள், ஆசைகள், உணர்வுகள் தனித்துவமானது. மனதால் அவர்களை ஆராதனை பண்ணாது; வெளித் தோற்றத்தில் அவர்களை மிளிரச் செய்ய அதிக அக்கறை செலுத்துவது அவர்களை சந்தோசப்படுத்தாது. மாறாக பசியில் இயலாது சுருண்டு விழுந்தவனைப் பார்த்து; உழைத்துச் சாப்பிடு என நிராகரிப்பதைப் போல விழலுக்கு இறைத்த நீராகவே உங்களது மொத்த கவனிப்பும் அவர்களிடத்தில் பூஜ்ஜியமாக நொருங்கி விடும். இதன் தொடர்ச்சி அவர்களது உடல், உள, சமூக விடயங்களில் மிகப் பெரிய எதிர்மறை தாக்கத்தை உண்டு பண்ணுவதாக பிற்காலத்தில் உருவெடுக்க கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக காணப்படுகின்றன.

இரண்டாவது குழந்தை வயிற்றில் உதித்த தருணத்தில் இருந்து முதல் குழந்தைக்கு போராட்ட காலம் ஆரம்பிக்கிறது என்பதை கருத்திற் கொண்டு உங்களது செயற்பாடுகளை திறம்பட அமைத்துக் கொள்ளுங்கள் அல்லது முடியுமாக இருந்தால் அவர்களது ஒவ்வொரு நடத்தையும் கூர்ந்து கவனியுங்கள். அது அவர்களை முறையாக கையாளுவதற்கு ஏற்றதாக அமையும். ஏனெனில் முதல் குழந்தைகள் ஒவ்வொரு பருவத்திலும் வெவ்வேறு விதமான மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர். ஆதலால் அவர்கள்  உளரீதியாக பாதிப்படைவதை ஆரம்ப கட்டத்திலே கவனத்தில் கொண்டு செயற்படுவது ஏற்புடையது ஆகும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் முன்மாதிரியாக சுட்டிக்காட்டி பேசப்படுவது முதல் குழந்தைகளே ஆகும். இதனால் அவர்கள் கைவிடும் விடயங்கள் பலதரப்பட்டவையாக வரிசையில் நிற்கின்றன. மனிதனது அடிப்படை உரிமையான உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்தவது முதலில் தடை செய்யப்படுகிறது. ஒவ்வொரு விடயத்திற்கும் எடுத்துக்காட்டாக முதல் பிள்ளைகளை திகழ வைப்பது மறைமுகமாக அவர்களை ஒடுங்கிய ஒரு மனநிலைக்கு தள்ளுகிறது. மற்றும் குறிப்பிட்ட வயதுக்குரிய குறும்புத்தனங்கள் இல்லாமல் ஆக்கப்படுகிறது. இது அவர்களது வெளிச்சமான வாழ்க்கைக்கு அஸ்தமானமாகும். ஏனைய குழந்தைகளது வளமான வாழ்க்கைக்கான முதல் குழந்தைகளின் அர்ப்பணிப்பு உருகும் மெழுகுவர்த்தியின் நிலைக்கு அவர்களை ஆளாக்குகிறது.

மேலும், பெற்றோர்களது கண்ணோட்டத்தில் பிள்ளைகள் அனைவரும் ஒருமித்தவர்களாக கருதப்பட வேண்டும். இது மூத்த மகன், இது கடைசி மகள் என்ற எண்ணப் பாகுபாடு களைந்து எறியப்பட வேண்டும். ஏனெனில் பிள்ளைகளுக்கு இடையிலான முதல் பாகுபாடும், விரிசலும் இவ் வகையான பெற்றோரின் எண்ணவோட்டத்தில் இருந்தே பிறக்கிறது‌. ஒவ்வொரு வீட்டினிலும் உள்ள குழந்தைகளது வயதுகள் வேறுபட்டவையாக இருந்தாலும் அவர்களது எதிர்ப்பார்ப்புக்கள், தேவைகள், உணர்வுகள் உங்களிடம் ஒன்றுபட்டதாகவே இருக்கும். ஆதலால் அவர்களை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய வழிமுறையும் வளர்க்க வேண்டிய ஒழுங்கும் ஒன்றைத் தவிர ஒன்றாகவே இருத்தல் அவசியமாகும். அந்த மாறுபாடான ஒன்று, உங்களது ஒவ்வொரு குழந்தைகளினது வயதுக்கு ஏற்றது போல அவர்களது வாழ்க்கை, ஒழுக்கம் சீர்படத் தேவையான பொருத்தமான அறிவுரைகள் மட்டுமே ஆகும்.

குடும்பக் கட்டமைப்பில் விரிசல் விழாது உங்களோடு சேர்த்து, உங்களது ஏனைய குழந்தைகளையும் எதிர்ப்பார்ப்பின்றி மார்பிலும், தோளிலும் தாங்குபவர்களாக பெரும்பாலும் முதல் குழந்தைகளே காணப்படுகிறார்கள். தன் வயதுக்கு ஒத்த அத்தனையையும் தீண்டாது, கடமையை நிறைவேற்றுவதில் கண்கொத்திப் பாம்பாக இளவயதிலேயே அனுபவஸ்தவர்களாக திகழும் அவர்களை குடும்ப விடயங்களில் முதன்மைப் படுத்துங்கள். அவர்களோடு கலந்தாலோசித்து உங்களது மற்றைய வரப்பிரசாதங்களுக்கு குறைவின்றி அள்ளிக் கொடுங்கள். ஏனெனில் அவர்களது எல்லா வகையான இழப்புக்களுக்கும் நீங்கள் அன்பளிக்க வேண்டிய ஆதரவும், அணைப்பும் அவர்களுக்கான அந்தஸ்தும், முன்னுரிமையுமே ஆகும்.

பெற்றோர்களாகிய உங்களது அன்புக்காக மனதளவில் யாசிக்கும் நிலைக்கு அவர்களை ஆளாக்கி விடாதீர்கள். ஏனெனில் உங்களது அன்புக்கான வெற்றிடம் நீங்கள் அன்றி வேறு எவராலும் நிரப்ப முடியாதது ஆகும்.  எல்லாக் குழந்தைகளும் எதையும் புரிந்து நடக்கும் மனப்பக்குவம் உடையவர்கள் அல்ல. அதனால் அவர்களது ஒவ்வாத தன்மை, எதிர்ப்புக்கள் வேறு விதமாக குடும்பச் சூழலைத் தாக்கலாம். எப்பொழுதும் அவர்களிடம் ஒரு முரண்பாடான தன்மையும் காணப்படலாம். தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியறியாது சிக்கித் தவிக்கும் அவர்களை முதன்மையுடன் போற்றி வழி நடாத்துங்கள். உங்களது கரங்களில் உணர்ந்த முதல் உயிரின் ஸ்பரிசத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

உங்களை விட்டு விலகிச் செல்லும் அவர்களை மீண்டும் உங்களோடு இணைக்கப் போராடாது; நீங்கள் அவர்கள் அருகில் நெருங்க முயற்சியுங்கள். அவர்கள் அருகில் உறுதுணையாக என்றும் இருப்போம் என்பதை உணரச் செய்யுங்கள். அவர்களுக்கு உரித்தான உங்கள் அன்பை வெளிப்படையாக வெளிப்படுத்துங்கள். நீங்கள் அவர்களைத் தாங்கும் ஒற்றைத் துளி அன்பே உங்களது வீட்டில் ஏனைய அனைத்தையும் முறையான ஒழுங்கில் மோற்கொள்ள போதுமானது ஆகும். ஏனெனில் நீங்கள் அவர்களை தாங்குவதன் சக்தி மற்றும் சுடர் அவர்கள் ஊடாக உங்கள் மொத்த குடும்பமும் நிலைகுலைந்து போகாது நிறுத்திப் பிடிக்கும். அவர்களது அத்தனை தேவைகளும் இயல்பானது மற்றும் சாதாரணமானது. அதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்ற குழந்தைகளின் கவனிப்பில் இவர்களை அலட்சியப்படுத்தி புறக்கணித்து விடாதீர்கள். எந்த உறவிலும் புறக்கணிப்பை தாங்கா முடியாத அவர்களுக்கு பெற்றோரின் புறக்கணிப்பு அதிகளவான மனவேதனைக்கு உள்ளாக்கும். இவ்வளவு நாட்கள் குழந்தை வயதில் தெரிந்த அவர்கள் அடுத்த குழந்தையின் வருகையுடன் பெரிய மனிதர்களாக, வளர்ந்தவர்களாக கணிக்கப்படுவது பிழையானது. மனதளவில் குமுறிக் கண்ணீர் வடிக்கும் தனித்தவர்களாக அவர்களை ஆக்கி விடாதீர்கள். ஏனெனில் அவர்கள் கேட்க ஆசைப்படும் பெற்றோர்களின் அன்பின் மொழி இயல்பானது என்பதை விட இயற்கையான உணர்வாகும்.

மூத்த குழந்தைகள் பெற்றோர்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்கள். அதனால் அனைத்து துன்பங்களையும் தனக்குள்ளே புதைத்து வீட்டின் நிம்மதியை பேணுகிறவர்கள். விட்டுக் கொடுப்பதில் முதல் இடம் பிடித்தவர்கள். மேலும் முதல் குழந்தைகள் பெற்றோரைச் சார்ந்தே தங்கள் வாழ்வின் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு காரணமாக அமைவது பெற்றவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையும் நன்றியுணர்வுமே தவிர அவர்களால் தனித்து எதையும் சமாளித்து வாழ முடியாது என்பதனால் அல்ல. பிறந்தவுடன் சுவாசித்த தாயினதும், தந்தையினதும் மூச்சுக்காற்றின் விசுவாசிகள் அவர்கள்.

தற்கால நமது நாட்டு சூழ்நிலையில் பல குடும்பங்களின் முதுகெலும்பாக தொழிற்படுவது மூத்த பிள்ளைச் செல்வமே ஆகும். தனது தந்தைக்கும் தாய்க்கும் அடுத்து பொறுப்புக்களை தன் மேல் ஏற்றி வைக்கும் குடும்பத்தின் விடிவெள்ளிகள் அவர்கள். நமது சமூகத்தில் அவ்வாறான விடிவெள்ளிகளின் வியர்வையில் பலரது வாழ்வு நன்றாக செழித்து நிற்பதைக் காணக் கூடியதாக உள்ளது. அண்ணா அக்கா என்ற உறவுமுறையை தாண்டி அவர்களுக்குள்ளும் தாய்மையும் தந்தையின் தியாகமும் பிறப்பிலேயே வேரூன்றி உள்ளது. தாய்க்கு முடியாத காலத்தில் தனது உடன் பிறப்புகளுக்கு தாயாக மாறும் அவளது அன்பில் தாயானவள் அவள். தந்தைக்கு அடுத்து குடும்பத் தேவைகளின் வரிசையில் தன்னைத் தொலைக்கும் அண்ணன் தந்தையின் மறுவடிவமானவன். சிறுவயது தொடக்கம் தனக்கென எதுவும் சேமிக்காது, உணர்வுகளின் போராட்டத்தில் அடைப்பட்டு குடும்பத்தின் நலனுக்காக பாடுபடும் குருத்துக்கள் சிறுவயதில் இருந்தே பொத்திப் பாதுகாத்து அன்புகாட்டப்பட வேண்டியவர்கள். உங்களது குடும்ப முத்திரையாக அடையாளம் காட்டும் அந்தஸ்திற்கு தகுதியானவர்கள். ஏனெனில் மூத்தவர்களின் இழப்பில் இளையவர்களின் மகிழ்ச்சி அடித்தளம் இடப்படுகிறது. சமூகத்தோடு வேரூன்றி இருக்கும் உங்களுக்கு மூத்த குழந்தைகளின் வாழ்க்கைப் பற்றிய புரிதல் ஓரளவுக்கு தெரிந்திருக்கும். ஏனெனில் பெற்றோர்களாக இருக்கும் நீங்கள் உங்களது தாய்க்கும் தந்தைக்கும் பிள்ளைகளாக இருந்தவர்கள், இன்றும் இருக்கிறவர்கள். ஆதலால் உங்களது கடந்தகால வீட்டுச் சூழலை சற்று புரட்டிப் பார்க்கும் போது, அனைத்தும் உணர்ந்து கொள்ள சிறுவயது ஞாபகங்கள் போதுமானது. சிலருக்கு சந்தோஷத்தை கொட்டும் இளம் வயது, பலருக்கு வடுக்களின் சேமிப்பு பெட்டமாக அமைந்து விடுகிறது. அனுபவத்தில் கற்றதை உபயோகிக்க வேண்டிய தக்க சமயத்தில் சரியாக பிரயோகிங்கள். அவர்கள் உங்களது குழந்தைகள். உங்களது சந்தோசங்கள். உங்களது இலட்சியங்கள். உங்களது கனவுகள். சுருக்கமாகச் சொன்னால் உங்களது எதிர்காலமே அவர்கள் தான்.  அவ்வாறான அவர்களின் மனது நீங்களே அறியாது வலியில் இளைப்பாற விட்டு விடாதீர்கள். அச் செல்வங்கள் உங்களால் துன்பப்படுகின்றது என்பதை தெரிந்து கொள்ளும் போது; அதைத் தாங்கும் மனவலிமை உங்கள் ஒருவருக்கும் இருக்கப் போவதில்லை. ஏனெனில் பெற்றோர்களின் அன்பு புனிதமானது. ஆனால் அது தடம் மாறாது ஒரே வகையில் செலுத்த கற்றுக் கொள்ளுங்கள். உங்களது பொறுப்புக்களை, கடமைகளை நிறையாக பூரணப்படுத்துவது போல உணர்வின் உள்ளத்தையும் அலங்கரித்து அழகு பாருங்கள். ஏனெனில் அன்பின் இழப்பே! பலரது வாழ்வின் திருப்பங்களுக்கு வித்திடுகிறது. உங்களது வளர்ப்பின் நற்பெயரும் நல்லாசியும் அவர்களின் அர்த்தமுள்ள வாழ்க்கையினிலே என்றும் தங்கியுள்ளது. காலம் கடந்த பின் எதுவும் கிடைக்காது  என்பது பெற்றோரின் அன்பின் அதிகாரத்தில் எழுதப்படாத ஒன்றே ஆகும். பெற்றோரின் அன்பு நிறைவேற்ற முடியாத நிராசை அல்ல. எனவே, எத்தனை வயதை அடைந்தவர்களாக உங்கள் முதல் குழந்தை இருந்தாலும், அவர்கள் மனதளவில் உங்கள் அன்புச் சோலைக்காக காத்திருக்கும் ஊமைக் கிளிகள். ஆகையால் அவர்களின் மனங்களை இனிமேலாவது பூந்தென்றலாக சாந்தப்படுத்தி விடுங்கள். எதுவுமே அறியாது உங்களை மட்டுமே முழுவதும் நம்பி பூமியில் அவதரித்த அவர்களை அன்பின் வழியில் ஒரே போல வழிப்படுத்துங்கள்.

Similar Posts:

    None Found
Please follow and like us:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *