இயந்திரமயமாய் இயங்கிய இவ்வுலகை திடீரென முடக்கியது கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமி. கடந்த டிசம்பர் முதல் இன்று வரை சர்வதேச அளவில் முக்கிய பேசுபொருளாக காணப்படுவதும் கொரோனா எனும் இவ் ஆட்கொல்லி நோய் தான். எமது நாடு மட்டுமன்றி உலகளவில் பல இலட்சக்கணக்கான உயிர்களையும் காவு கொண்டுள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்து அனைவரையும் வீடுகளில் சிறைப்படுத்தி வைத்துள்ளது யாவரும் அறிந்ததே. இதனால் மக்களில் பலர் தமது தொழில்களை இழந்து, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் சொல்லொணா பெருந்துயரில் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறான இக்கட்டானதொரு சூழலில் தான் முஸ்லிம்களாகிய நாங்கள் இப்புனிதமிகு றமழான் மாதத்தை அடைந்துள்ளோம். இத்தனை காலத்திற்கும் எம் வாழ்நாளில் சந்தித்த வித்தியாசமானதொரு றமழான் இது. கடந்த 7/8 வார காலமாக ஐவேளை பர்ளான இமாம் ஜமாத் எமக்கில்லை. புனித ஜும்ஆக் கடமையும் நிறைவேற்றவில்லை. பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இறை இல்லமாம் புனித கஃபா கூட சனசந்தடியின்றி ஓய்வாக காட்சி தருகின்றது. இந்நிலையில் பல்லாயிரக்கணக்கான வீடுகள் இன்று மஸ்ஜித்களாக மாற்றப்பட்டு தனியாகவும், கூட்டாகவும் தொழுகைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அல்ஹம்துலில்லாஹ். ரமழான் வந்துவிட்டாலே இரவு நேரங்களை உயிர்ப்பிப்பது பள்ளிவாசல்களில் ஓதப்படும் கிராத்களும், தராவீஹ் தொழுகைகளும் தான். இப்போது அவற்றுக்கெல்லாம் ஓய்வு கொடுக்கப்பட்டு, தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் “அதான்” மட்டும் ஐவேளையும் ஒலித்து ஓய்கிறது. தொழுகைகளோ, பிரார்த்தனைகளோ எதுவுமின்றி சோபை இழந்து நிற்கும் நிலையில் பெருநாள் தொழுகை என்பது கூட சாத்தியம் இல்லாத ஒன்றுதான். இந்நிலையில் முஸ்லிம் உம்மத்துக்கள் பெருநாளை மாத்திரம் ஆடம்பரமாக கொண்டாட நினைப்பது எந்த வகையில் நியாயம். ஆடை அணிகலன்களை வாங்க முண்டியடித்து, அலைந்து திரியும் சகோதர சகோதரிகளே சற்று சிந்திக்கமாட்டீர்களா? பெருநாள் குதூகலத்தில் நாம் எமது வாழ்க்கையை பறிகொடுக்க தயாராகக் கூடாது. பெருநாள் புத்தாடைகளின் மகிழ்ச்சியை விடவும் பாரதூரமானது இக்கொடிய வைரஸின் தாக்கம். அதிலும், எரிகிறோமா, புதையுறுகிறோமா என்பது கூட நிச்சயம் இல்லாத நிலையில் ’ஐசியூ’வையும் வெண்டிலேற்றர்களையும் நோக்கிப் பயணிக்க நாங்கள் தயாராக வேண்டுமா? மாற்றுச் சமூகத்தினரதும் பண்டிகைகள் வந்துசென்றதுதான். அவர்கள் அரசு விதித்த சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து மனித நேயத்துடன் நடந்துகொண்ட போது, மனித நேயத்தாலே உருவான இஸ்லாமிய மார்க்கத்தில் வாழும் நாம் முன்மாதிரியாக இருக்கக் கூடாதா? ஏற்கனவே முஸ்லிம்கள் பற்றியும், ஊரடங்கு காலத்தில் முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்காமல் இருந்தார்கள் எனவும் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் இனவாத ஊடகங்களும், முகநூல் இனத்துவேச சக்திகளும் பரப்பிவரும் ஒலி/ஒளி பதிவுகள் எம் சமூகத்தை இழிவானதொரு சமூகமாக சித்தரித்துக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு மேலும் தீனி போடுவதற்கு நாம் தயாராவது நமது முஸ்லிம் சமூகத்திற்கே செய்யும் துரோகமாக மாறாதா?ஊரடங்கு அமுலில் இருந்த வேளையிலும், இவ்வைரஸின் பிடி உச்சத்திலிருந்த போதும் எமது சகோதர சமூகங்கள் புதுவருடத்தையும், வெசாக் பண்டிகையையும் கொண்டாடினார்களோ நாமும் அது போன்ற விமர்சையான கொண்டாட்டங்களை தவிர்த்து அயலவர்களோடும், ஏழைகளோடும், குடும்பத்தினர்களோடும் பகிர்ந்துண்டு நபிகளார் காட்டித்தந்த வழியில் எளிமையானதும், முன்மாதிரியானதுமான பெருநாளை கொண்டாடி, நாட்டையும், நம்மையும் பாதுகாப்போம். புனித றமழானில் மீதம் இருக்கும் நாட்களில் இரவு வணக்கம், குர்ஆன் ஓதுதல், தௌபா, இஸ்திஃபார் வணக்கங்களில் வீடுகளிலிருந்தே அதிகமதிகம் ஈடுபடுவதோடு, தானதர்மங்களை அள்ளி வழங்குவதிலும் முனைப்புடன் செயற்படுவோம். பாரிய பொருளாதார அழுத்தங்களுக்கு உள்ளாகி தன்மானத்தை அடகு வைத்து, வெளியே சென்று உதவி கேட்க முடியாது தவித்து நிற்கும் குடும்பங்களுக்கு எம்மால் முடியுமான உதவிகளையும் வழங்குவோம். அரசாங்கம், சுகாதாரத் திணைக்களத்தின் வழிகாட்டல்களை கடைப்பிடித்து , எமது தொழுகைகள், பெருநாள் நிகழ்வுகளை வீட்டோடு மட்டுப்படுத்தி, அமைதியானதும், ஆர்ப்பாட்டமற்றதுமான ஒரு பெருநாளை எளிமையாக கொண்டாட இன்றே திடசங்கற்பம் பூணுவோம்.
AUMSA – வழித்தடம்
M.R Zeeniya Jabeen
யாழ் பல்கலைக்கழகம்
#aumsa#aumsa_article#T0002#the_path
Similar Posts:
- கட்டுரை இல: T0003 அல்குர்ஆன் ஓர் அறிவியல் நூல் என்ற வகையில் அதன் மீதான எமது கடமைகள்
- கட்டுரை இல: T0001 தொற்றுநோயை நபியவர்கள் அணுகியது எவ்வாறு?
- The Massive independent day campaign
- Exco & Advisory Meeting 2020.01.18
- 1000 Home Gardening Project